மீள்: பேட்டி: இசைக் கலைவாணி பகுதி (2)

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி பகுதி (2)

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

ரகு: “நானே நானா” பாடல் கூட ஒரு வித்யாசமான ஸ்டைலில் அமைந்த பாடல். அது போன்ற பாடல்களுக்கு எப்படி உங்களை அடாப்ட் செய்து கொள்கிறீர்கள்?

வாணி: அந்தக் காலத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றாக ஸ்டூடியோவில் அமர்ந்து பாடல் தயாராகும் விதத்தைப் பார்ப்பதே புது அனுபவமாக இருக்கும். இசை அமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், துணை இயக்குநர், வாத்திய இசை வல்லுநர்கள், பாடகர் பாடகிகள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அப்போது நம் முன்னாலயே இசை அமைக்கப்பட்டு, சொல்லித் தரப்பட்டு, நாங்கள் கற்றுக் கொண்டு, 2 3 ரிஹர்சல் எடுத்துக்கொண்டு, டேக் எடுத்து பாடி விடுவோம். இத்தனையும் காலை 9 மணி முதல் 1 மணிக்குள் நடக்கும். ஒரு மணிக்குள் ஓக்கே ஆக்கிவிட்டு வருவோம். இப்பொழுது technologically advanced ஆகி இருக்கிறோம். Track system வந்துவிட்டது. இப்பொழுது நம்முடன் டூயட் பாடுவது யார் என்று கூடத் தெரியாமல், நம்முடைய portion மட்டும் பாடிவிட்டு வந்து விடலாம். ஒரு பாடலை முழுதாகப் பாடாத அல்லது ஒவ்வொரு வார்த்தையாகப் பாடும் அளவுக்கு technology வளர்ந்திருக்கிறது.  அந்தக் காலக்கட்டத்துடைய அனுபவம் இப்போது இல்லை. 5 சரணம் இருந்தாலும், ஒரே டேக்கில் பாடி முடித்துவிட வேண்டும். அதில் பாடகர்களோ அல்லது வாத்திடய இசைக் கலைஞர்களோ ஒரு சிறிய தவறு செய்துவிட்டால் கூட திரும்ப முதலிலிருந்து டேக் எடுத்து பாட வேண்டும். அது மட்டுமல்ல. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில். நாங்கள் பாடுவதற்கு முன், கதை இப்படி; இந்தக் கட்டத்தில் இந்த பாடல் வரும்; கதாநாயகி இப்படி பீல் பண்ணி இந்த மூடில் பாட வேண்டும்; நீங்கள் அதற்கேற்றபடி பாவம் கொடுத்து பாட வேண்டும். எல்லாவற்றையும் இயக்குநர் எங்களுக்கு விவரித்து சொல்லுவார். அதைக் கேட்டு விட்டுத்தான் பாடுவோம்.

ரகு: பழங்கால இசை முறையானது கடிநமானதாகவும், அதிக பயிற்சி தேவைப்படுவதாகவும் இருந்திருக்கும். பயிற்சிக்கென்று எப்படி நேரத்தை ஒதுக்குவீர்கள் மேடம்?

வாணி: பிண்ணணிப் பாடகர் பாடகியருக்கெல்லாம் கணினி போல அபார கிரஹிக்கும் தன்மை இருக்கும். யாருக்கும் ஆனா ஆவன்னாவிலிருந்து சொல்லித் தர நேரம் இருக்காது. We are supposed to grasp it and pick it up fast. அந்த கிரகிக்கும் தன்மை இருந்தால்தான் இந்த துறையில் வேலை பார்க்க முடியும். அதனால்தான், சில சமயங்களில் நேரடி ஒலிப்பதிவு இருந்த காலத்திலும் கூட, ஒரே ஷிப்டிலேயே 5 6 இடங்களுக்குச் சென்று எங்களால் பாட முடிந்திருக்கிறது. Track system வந்த பிறகு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கன்னடம் தெலுங்கு எல்லாம் அந்தந்த மாகாணத்திற்கு பிரிந்து சென்ற காலம் அது. அதற்கு முன் 4 மொழிகளிலும் சென்னையில் தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அப்பொழுது கன்னடப் பாடல்களுக்கு பெங்களூர் செல்லவேண்டும். தெலுங்கு பாடல்களுக்கு ஹைதிராபாத் செல்ல வேண்டும். மலையாளப் பாடல்களுக்கு கேரளா செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது. கன்னடப் பாடல்களைப் பாடுவதற்காக, ஒரு 5 ஆண்டு காலமாக, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், ப்லைட்டில் சென்று, 12 13 14 பாடல்களைப் track போட்டு பாடிக் கொடுத்து விட்டு இரவு இறுதி விமானத்தில் தான் வீடு திரும்புவேன். அந்த மாதிரி எல்லாம் வேலை செய்திருக்கிறேன். ஏன் நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் அந்த அளவுக்கு grasping power இருந்தது. உடனே பாடல் எழுதி, கற்றுக்கொண்டு, தயாராகி பாட முடிந்தது.

ரகு: முழு கவனத்தோடு சிறப்பாக பாட முடிந்திருக்கிறது என்பது புரிகிறது. மேடம், நீங்கள் எம்எஸ்வி சார், மற்றும் ஷங்கர் கணேஷ் சாருடந் பணியாற்றியபோது உங்களுக்குக் கிடைத்த முக்கியமான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? கடினமான பாடல்களை மாற்றி அமைத்தது போன்ற எதாவது.

வாணி: இல்லை, இல்லை. எமெஸ்வி சார் மிகப்பெரிய மேதை. அவருடைய இசையில் பாடுவது ஒரு பெரிய பாக்கியம். அவருக்கு அபாரக் கற்பனை வளம். சங்கதிகள் வெள்ளம்போல்  பெருக்கெடுத்து ஓடும். நாங்களே எந்த சங்கதியைப் பாடுவது எதை விடுவது என்று மலைத்துப் போவோம். உங்களுக்கு எது சகாயமாகப் படுகிறதோ, நன்றாக இருக்கிறதோ அதை எடுத்துப் பாடுங்கள் என்று சொல்லுவார். ஷங்கர் கணேஷ் அவர்களுடன் வேலை செய்வது, பிக்நிக் செல்வதுபோல ரொம்ப ஜாலியா இருக்கும். ஷந்கர் சார் பாட்டு சொல்லிக் கொடுப்பார்; கணேஷ் சார் ஆர்க்கெஸ்ட்ரா பார்த்துக் கொள்வார். நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறேன். அதே போல தான் இளைய ராஜா அவர்களிடமும் இருந்தது.

ரகு: இளைய ராஜா சாரிடம் “வைதேகி காத்திருந்தாள்”, “கவிதை கேளுங்கள்” உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறீர்கள். பொதுவாக, இளையராஜா அவர்கள் பாடகர்களிடமும், இசைக்கலைஞகர்களிடமும் மிகவும் கண்டிப்பாக இருக்கக் கூடியவர் என்ற கருத்து நிலவுகிறது. ராகம், தாளம், ஸ்ருதி எதாவது தவறும்போது முதலிலிருந்து retake செய்வாராமே..

வாணி: இல்லை இல்லை. எந்தெந்த பாடகர்களுக்கு எந்தெந்த பாடலுக்கு எந்த சுருதி வைத்தால் சரியாக இருக்கும் என்பது முன்னாலையே அவர்களுக்கு தெரியும். பாடல் தயாரானதும் சென்று கற்றுக் கொண்டு பாட வேண்டும். ராஜாவிடம் வேலை பார்த்தது நல்ல அனுபவம். முன்னாலேயே ஹோம் ஒர்க் செய்து வைத்திருப்போம். அவர் பாடலை சொல்லித் தருவார். நாங்கள் பாடிவிட்டு வந்துவிடுவோம் அவ்வளவுதான் எந்த பிரச்சனையும் இல்லை. “கவிதை கேளுங்கள்” ஒரே டேக்கில் பாடிய பாடல். (பின்னணியில் “கவிதை கேளுங்கள்” பாடல் ஒலிபரப்பாகிறது).

 ரகு: எம்எஸ்வி சாரிடம் இருந்து இளையராஜா சாருக்கு வரும் போது பெரிய அளவில் மாற்றம் இருந்திருக்காது. 95க்கு பிறகு நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன.

 வாணி:  மியூசிக் குளோபலாக இருக்க வேண்டும் என்பதற்காக இசை அமைப்பாளர்கள் வேறு வேறு மாதிரியான புது புது இசை நுணுக்கங்களை  படங்களில் பயன்படுத்துவதற்காக சவுண்ட் சிஸ்டம் பற்றி பேச தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு முன்னால் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சிறு வயதில் கேட்ட “போனால் போகட்டும் போடா”, “ஆறு மனமே ஆறு”, “எங்கே நிம்மதி” போன்ற பாடல்களை மறக்க முடிவதில்லை.  அப்போது குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட பாடல்கள் அவை.  அதற்கு பிறகு,  நீங்கள் சொன்னது போல கால  கட்டம்  சேஞ்ச் ஆகி இருக்கின்றது.  அரபிய, சூபி பாடல்கள் அதிகம் வரத் தொடங்கி விட்டன. அதை நான் தவறு என்று சொல்லவில்லை. பாடகர்கள் என்ன பாடுகிறார்கள் என்பது தெளிவாக புரிய வேண்டும் அல்லவா? இப்போதைய பாடல்களில் வாத்தியங்கள் வரிகளை அமுக்கி விடுகின்றன. இது நான் மட்டுமல்ல பலர் சொல்கின்ற பொதுவான கருத்து.

ரகு: இப்பொழுது தமிழில் rap,fusion என்றெல்லாம் சொல்கிறார்கள். பழைய பாடல்களை remix செய்வதை நீங்கள் விரும்பத்தக்க வளர்ச்சி என்று கருதுகிறீர்ளா?

வாணி: remix குறித்த என்னுடைய தாழ்மையான அபிப்ராயத்தை சமீபத்தில் கேரளாவில் நடந்த press conference இன் போது குறிப்பிட்டிருந்தேன். யாரையும் குறை சொல்லவில்லை. அந்தக் காலத்தில்,ஒரு கதையை எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட சூழல் குறித்து அதிகம் யோசிக்கப்பட்டு,இசை அமைக்கப்பட்டது. என்னிடம் திரு.நௌஷாத் அவர்கள் சொல்லுவார். ஒவ்வொரு பாடலுக்கும் நாங்கள் மாதக் கணக்கில் உழைப்போம். எப்படி ஒரு சிற்பி செதுக்கிச் செதுக்கி ஒரு அழகான சிற்பத்தைக் கொடுக்கிறாரோ,அந்த மாதிரி ஒரு பாடலுக்கு அவர்கள் அவ்வளவு உழைப்பைப் போட்டு எடுக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் எந்தச் சூழலுக்கு எந்த வாத்தியங்களைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நன்றாகப் புரிந்து கொண்டு எடுத்திருப்பார்கள்.அதை டிஸ்கோ மயமாக்கி, தாளத்தை மாற்றி,இந்திய இசையை westernise செய்து remix உருவாக்குவதைவிட,நம் நாட்டில் திறமைக்குப் பஞ்சமில்லை;மிகச் சிறந்த திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்கள் remix செய்வதைவிட மக்களுக்கு புதிதாகப் பாடல்களைக் கொடுக்கலாம். அந்தந்தக் காலகட்டத்தில் வந்த பாடல்களை அப்படியே தொடாமல் விட்டாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.

ரகு: இப்போது இசை கணினி மயமாகி விட்டது. ஒரு தனிமனிதர் ஏற்கனவே மென்பொருளில் உள்ள இசைக்கோர்வையை எடுத்து cut, copy,mix செய்து புதிய பாடல்களை உருவாக்கி விடுகிறார். இதை என்ன செய்யலாம்? மாற்றுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

வாணி: “நான் எப்படி மாற்ற முடியும்?நான் அந்தக் காலத்தில் வேலை பார்த்தேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளத்தான் முடியும்” என்று சொல்லி சிரித்தவர் “actually புதிதாக இசையை உருவாக்கி, பயிற்றுவித்துப் பாட வைக்கக் கூடியத்  திறமைசாலிகள் ஏகப்பட்டோர் இருக்கிறார்கள். சமீபத்தில், அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியைச் சேர்ந்த நீலமயில் என்பவர் நிறைய தனிப் பாடல்களை எடுத்தார். ஏழு cd க்கள்;சுமார் அறுபது எழுபது பாடல்களைப் பாடிக் கொடுத்தேன். அனைத்தும் அற்புதமாக இசை அமைக்கப்பட்டப்  பாடல்கள்;challenging compositions; கஷ்டமான பாடல்கள்; பாடிக் கொடுத்தேன்.Orchestra அவ்வளவு நன்றாகச் செய்திருந்தார். அதிகம் உழைத்து, புதியப் பாடல்களை உருவாக்கி,வாத்தியங்களுடன் இணைந்து பாடினோம். தனித் திறமைகள் பாராட்டப்பட வேண்டியவை.”

ரகு: Album என்று சொல்கிறார்கள் அல்லவா மேடம்?

வாணி: நாங்கள் தனிப் பாடல்கள் private recording என்று சொல்லுவோம்.

ரகு: தமிழ் rap மற்றப் பாடல்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்று  சொல்லுங்கள் மேடம்.

வாணி:  தமிழ்  rap பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. இப்பொழுது கானா என்கிறார்கள்; rap என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அன்னமையா கீர்த்தனை என்றால்,அதனை அன்னமையா கீர்த்தனையைப் போல் பாடவேண்டும். கஜல் என்றால் சரியாகப் பாடவேண்டும். கீத் கோவிந்த் ஜெயதேவ் எழுதிய அஷ்டபதி ஒடீஸாவிலிருந்து வந்தது. குரு கோவிந்த் ஒலிப்பதிவு செய்யும்போது,

ஒடிஸி குரு கேலுசரண் முஹோபத்ரா அவர்கள் என்னுடன் பக்க வாத்தியம் இசைத்ததை நான் பெற்ற பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். ஒரியாவின் மிகச் சிறந்த இசை அமைப்பாளர்களுள் ஒருவரன திரு. பிரபு ஷங்கர் அவர்கள் இசை அமைத்துக் கொடுத்து, நான் பாடி,எங்கள் ஸ்டூடியோவிலேயே பதிவு செய்தோம்.Vani Music Company என்ற நிறுவனத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தினோம். இப்போது அது இல்லை. கீத் கோவிந்த் recordingக்கு பிறகு,கதக் இசைக் கலைஞர்  பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்களுடன் இணைந்து இரண்டு cassettes ஒலிப்பதிவு செய்தோம். ஒன்று டும்ரி டாட்ரா பஜன்;மற்றொன்று holy songs.பிறகு, மராட்டியில் பாண்டுரங்க விட்டலா, கேஷவராஜ் காம் கீர்த்தி  என்று இரண்டு cassettes பாடிக் கொடுத்தேன். தமிழில் நிறைய பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன்.  வெங்ககடேச சுப்ரபாதம்,அம்பிகை வருவாள், துர்கா லக்ஷ்மி சரஸ்வதி போன்றவை. எதற்குச் சொல்கிறேன் என்றால்,இசை ஒரு பெரிய சமுத்திரம். தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும். நாம் கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லோருக்குமே தெரியும்; நான் சொல்ல வேண்டியதில்லை.நான் இன்றைக்கும் மாணவி தான். எதையும் சாதித்துவிட்டதாய் எள்ளளவும் எண்ணமில்லை. நான் எதையும் சாதிக்கவில்லை. இன்றும் வளரவேண்டுமென் றுதான் நிநைக்கிறேன்.

ரகு: நீங்கள் மிகவும் எளிமையாகவும் தன்னடக்கத்துடனும் பதில் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுவே எங்களுக்கு மிகப் பெரிய பாடம். அபூர்வ ராகங்கள் பாடலுக்கும்,மீரா படப் பாடலுக்கும் விருது பெற்றிருக்கிறீர்கள்.

வாணி: முதல் தேசிய விருது அபூர்வ ராகங்களுக்குக் கிடைத்தது. இரண்டாவது முறை தெலுங்குப்படம் ஷங்கராபரணத்திற்கும்,மூன்றாவது முறை ஸ்வாதிகிரணம் எந்ற தெலுங்குப் படப் பாடலுக்குக்கும் கிடைத்தது. மீரா படம்

திரு. குல்ஜார் அவர்களுடைய இயக்கம். அபூர்வ ராகங்கள்,திரு.கே.பாலச்சந்தர் இயக்கியது. ஷங்கராபரணமும்,ஸ்வாதிகிரணமும்

 திரு.கே.விஸ்வநாத் அவர்கள் இயக்கத்தில் உருவானவை. மீரா பாடலுக்கு Best Playback Singer என்ற FilmFare Award கிடைத்தது. அது தவிர தமிழில் நிறைய மாநில விருதுகள்.

ரகு: கலைமாமணி விருது?

வாணி: அது நிறைய பேர் வாங்கியிருக்கிறார்கள். Lifetime Achievement Award 2004 சிங்கப்பூரில் கொடுத்தார்கள்; ஹைதராபாத்தில் கொடுத்தார்கள். கடவுளுடைய அனுக்கிரகத்தால் நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். (எது சுகம் சுகம் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது).

வள்ளுவன் பார்வை வழங்கும், பாடகி வாணி ஜெயராம் அவர்களோடு பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்கள் நடத்திய நேர்காணல் பகுதி (2) கேட்க:

ரகு: ஒரியா,குஜராத்தி, கொங்கணி போன்ற மொழிகளையெல்லாம் எப்படி மேடம்? முதலிலேயே கற்றுக் கொள்வீர்களா?

வாணி: இல்லை. முதலில் பாடல் எந்தச் சூழலுக்குப் பாடப்படுகிறது என்பதை விளக்குவார்கள். அதன் பொருள் புரிந்து கொண்டு,ஒவ்வொரு மொழிக்கும் உரிய local intonation என்று சொல்லப்படுகிற பிராந்திய வர்ணம் அல்லது வடிவம் கெடாமல் பாடிக் கொடுத்து விடுகிறேன்.

***பேட்டியின் இறுதிப் பகுதி அடுத்த இதழில்.

தொகுப்பு: திரு. ரகுராமன்.
எழுத்தாக்கம்: X. செலின்மேரி.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *